jump to navigation

என் தாய் எழுதிய கவிதை! செப்டம்பர் 24, 2007

Posted by swamytk in பகுக்கப்படாதது.
Tags: , , , , ,
add a comment

இதோ, என் தாய் எழுதிய கவிதை. இரண்டாம் வகுப்பே படித்திருந்தாலும், இந்த 62 வயதிலும் தன் உள்ளக்கிடங்கில் குடியிருக்கும் அம்மனை நினைத்து, பக்தியைத் தோய்த்து எழுதியுள்ளார். இது இவருக்கு முதல் கவிதையும் கூட.

மஞ்சமாதா! எங்கள் மனக்கவலை நீக்கிடுவாள்.
அம்மா! நீ பூமியை காக்கும் தேவி.
அம்மா! நாங்கள் உன் புகழைப் பாடிடுவோம்.
அம்மா! உன் சந்நிதிக்கு வருவோருக்கு செளபாக்கியம் தந்திடுவாய்.
அம்மா! அவள் மஞ்சள் பொடியை அள்ளி அள்ளிக் கொடுப்பாள்.
அம்மா! நல்ல நல்ல வரங்கள் தந்திடுவாள்.
அம்மா! மஞ்சமாதா வினைகளை ஓட்டிடுவாள்.
அம்மா! செல்வம் பெருக்கிடுவாள்.
அம்மா! எங்கள் குடும்பத்தைக் காத்திடுவாள்.
அம்மா! முத்து முத்துப் பல்லழகி முன்னின்று காத்திடுவாள்.
அம்மா! அவள் வீரமணிகண்டனுக்கு தங்கை.
அம்மா! நமக்கு மஞ்சமாதா துணை உண்டு.
அம்மா! அவள் ஐந்துமலைக்கு அதிபதியாய் இருப்பவள்.
அம்மா! கருப்பண்ணசாமி துணை உண்டு.
அம்மா! சங்கிலிகருப்பசாமி துணை உண்டு.
அம்மா! ஒத்தையடிப் பாதையில் ஆடி ஆடி வருவாள்.
அம்மா! இந்த பூமியைக் காக்கும் தேவி.
அம்மா! மஞ்சமாதாவே தேவி.
அம்மா! இருமுடி சுமந்து வருபவருக்கு வழித்துணையாக
பாடி பாடி வருவாள், அம்மா! அம்மா! அம்மா!

- கவிராணி ராசம்மாள்.

டாலர் தேசம் - ஒரு பார்வை ஜனவரி 16, 2007

Posted by swamytk in பகுக்கப்படாதது.
Tags:
add a comment

வழக்கம் போல நீண்ட இடைவெளி. மீண்டும் ஒரு சரித்திரப் புத்தகத்தை கையில் எடுத்து பாதி முடித்தும் விட்டேன். இதற்கு முன் இந்திய அரசியல் சரித்திரத்தின் ஒரு பகுதியை (நள்ளிரவில் சுதந்தரம்) அமெரிக்க + ஐரோப்பிய எழுத்தாளர்களின் கைவண்ணத்தில் படித்தேன். இந்த முறை அமெரிக்காவின் முழு அரசியல் சரித்திரத்தை, பா.ராகவன் என்ற இந்தியரின் எழுத்தில் டாலர் தேசம் என்ற புத்தகத்தில் படித்து வருகிறேன். வலிமை மிக்க, கவர்ச்சியான பெயரோடு வந்திருக்கும் இந்த புத்தகம், படிக்க மிக எளிமையாக (சில இடங்களில் பேச்சுத் தமிழாகவே….!) எழுதப்பட்டுள்ளது. குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் வெளிவந்த தொடர் தான் புத்தக வடிவில் டாலர் தேசமாக வெளியிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவைப் பற்றிய நூலின் ஆசிரியரின் பார்வை பக்கத்துக்கு பக்கம் மாறுபடுகிறது. இதுவே ஆசிரியர் நூலை நடு நிலைமையுடன் எழுத முயற்சிப்பதைக் காட்டுகிறது. அமெரிக்காவை சில பக்கங்களில் வியக்கிறார்; சில நேரங்களில் கிண்டல் செய்கிறார்; சில வரிகளில் அசிங்கப்படுத்துகிறார்; சில கணங்கள் உச்சிக்குக் கொண்டு சென்று பாராட்டுகிறார். ஆனால் எல்லாமே சற்று மிகையாகவே இருக்கிறது. ஒரு வேளை ஒரு பரபரப்பான வார இதழ் வாசகர்களுக்காக எழுதிய பாதிப்பாக இருக்கலாம். எது எப்படி ஆனாலும் ஒரு மிகப் பெரிய முயற்சியில் ஆசிரியர் பா.ராகவன் பெரும் வெற்றி பெற்றிருக்கிறார். கற்பனை உரையாடல்கள் இல்லாமல் ஒரு சரித்திரப் புத்தகத்தை சுவாரசியமாக எழுதுவது மிகக் கடினம். அதைத் திறம்பட செய்திருக்கும் ஆசிரியர் பாராட்டுக்குரியவர்.

இந்த புத்தகம், கொலம்பஸ் அமெரிக்கக் கண்டத்தைக் கண்டுபிடித்ததில் தொடங்கி தற்போதைய நிகழ்வுகளில் முடிகிறது. கொலம்பஸ் கண்டுபிடித்தவுடன், ரோம் நகரத்தின் போப் கண்ணசைவில் சில ஐரோப்பிய நாடுகள் மட்டுமே இங்கு குடியேறத் துவங்கின. அதன் பிறகு நாடு பிடித்துப் பணம் சம்பாதிக்கும் ஆசையில் பிரிட்டிஷ், ஃப்ரான்ஸ், ஸ்பானிஷ் மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவில் தங்கள் குடியேற்றங்களை அமைத்தனர். இவர்களில் போட்டியில் செவ்விந்தியர் எனப்படும் அமெரிக்காவின் பூர்வக் குடிமக்கள் எப்படியெல்லாம் தங்கள் சொந்த மண்ணை விட்டுத் துரத்தி அடிக்கப்பட்டார்கள் என்பதை முதல் சில பக்கங்கள் விவரிக்கின்றன. குடியேறிய காலனிகள் ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு தாம் ஐரோப்பியர் என்பதையே மறந்து தங்களை ஐரோப்பிய தாய் நாட்டு சட்ட திட்டங்களிலிருந்து விடுபடுத்திக் கொள்ள விடுதலைப் போரைத் துவங்கியிருக்கின்றனர். ஜார்ஜ் வாஷிங்டன் தலைமையில் போர்களில் வென்று சுதந்தரமும் பெற்றனர். ஜார்ஜ் வாஷிங்டன் தான் அமெரிக்காவின் முதல் அதிபர் என்று நினைத்துக் கொண்டிருக்கும் நமக்கு, ஜார்ஜ் வாஷிங்டனுக்கு முன்னால் ஆறு தலைவர்கள் அமெரிக்காவை ஆண்டனர் என்பது புதிய தகவல்.

குடியேறிகளான வெள்ளை அமெரிக்கர்கள் (முன்னாள் ஐரோப்பியர்கள்) தங்களுக்கு அடிமை வேலை செய்ய ஆப்பிரிக்க நாட்டு கருப்பர் இன மக்களை இறக்குமதி செய்து கொண்டனர். அவர்கள் இதை ஒரு தவறாகவே நினைக்கவில்லை. ஒரு உதாரணம் சொல்வதென்றால், ஒரு மாகாண நீதிபதி, பகுதி நேரத் தொழிலாக (Part-Time Job) அடிமை இறக்குமதி மற்றும் வினியோகம் செய்ததை சொல்லலாம். இந்த அடிமைகள் வெள்ளைக்காரர்களின் பண்ணைகளில், வீடுகளில் மிகக் கடுமையா வேலை செய்து வந்திருக்கின்றனர். மிக சொற்ப இரு வேளை உணவுக்காக தன் முதலாளிகளிடம் அடிபட்டு செத்த அடிமைகள் ஏராளம். அமெரிக்க அரசாங்கமே இதைப் பகிரங்கமாக ஆதரித்து வந்தது தான் கொடுமை. ஆபிரகாம் லிங்கன் காலத்தில் தான் அரசாங்கம் தன் கடமையை செய்து, இவர்களின் முன்னேற்றத்து வழி வகுத்தது. இந்த கருப்பர் இன மக்களின் அவதியை ஆசிரியர் நன்றாக விவரித்துள்ள போதிலும், அவர்கள் எப்படிப்பட்ட திட்டங்கள் மூலம் முன்னேறி வருகின்றனர் என்றும் விவரித்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். நமது தலித் மக்களின் நிலைமை முன்னேற நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றுவதே இதற்கு காரணம்.

அமெரிக்கா என்றாலே பணம் பணம் பணம் என்று நினைவுக்கு வரும் அளவுக்கு அவர்கள் முன்னேற என்ன காரணங்கள்? பெரும்பாலான அரசியல்வாதிகளின் கை சுத்தத்திற்கு என்ன காரணம்? (பெரும்பாலானோர் கட்டுப்பாடு மிக்க ராணுவத்தில் சாதனை செய்து ஓய்வு பெற்றவர்கள்) அமெரிக்கர்களின் நாட்டுப்பற்று எப்படிப்பட்டது? அவர்களின் மிகச் சிறந்த உள் கட்டமைப்பு வசதிகள் எப்படி சாத்தியமாயின? அவர்களின் உழைப்பு எவ்வளவு தீவிரமானது? சர்க்கரைப் பாகில் தேன் கலந்து வேப்பங்காயில் தடவிய அந்த முதலாளித்துவம் எப்படி சாத்தியமாயிற்று? அத்தனைக் கேள்விக்கும் நாமே பதில் தெரிந்து கொள்ளும் அளவுக்கு முதல் பாதி அத்தியாயங்கள் எழுதப்பட்டுள்ளன.

தலைப்பு: டாலர் தேசம்
மொழி: தமிழ்
ஆசிரியர்: பா.ராகவன்
பதிப்பாளர்: கிழக்குப் பதிப்பகம்
வெளியிடப்பட்ட ஆண்டு: 2004
விலை: ரூ.350.00